சென்னை: அஞ்சல் வாக்குக்கு அனுமதிக்கப்பட்ட உடல் ரீதியான மறறும் வயதான வாக்காளர்களின் தொகுதி பட்டியலை அளிக்க வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் சமீப காலமாக முதியோர்கள், ஊனமுற்றோர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம் என அறிவித்துள்ளது. இதற்கு திமுக உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. திமுக மனுவில், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முறையால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. வேண்டுமானால், முதியவர்களுக்கு தனி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் சென்னையில், தேர்தல் தொடர்பாக கருத்து கேட்ட தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் திமுக சார்பில், தபால் குறித்து மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுகவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தபால் ஓட்டு இந்த புதிய நடைமுறையை எதிர்த்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தபால்மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட உடல் ரீதியான சவால் மற்றும் வயதான வாக்காளர்கள் உள்ள தொகுதி வாரியாக பட்டியலை தேர்தல் ஆணையம் தங்களுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
திமுகவின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.