சென்னை: இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் வெளியிடும் வகையில், அதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றம், கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கியயது. 4 நாட்கள் மட்டுமே நடைபெற்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில், இந்த மாத இறுதியில் மீண்டும் சட்டமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஒப்புதல் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பெறப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு சலுகைகள், பெண்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் ரத்து, விலையில்லா டேப்லெட் பிசி, ஸ்மார்ட் போன் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை, 11:30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ். தலைமையில் நடைபெற உள்ளது.