சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டில், 300 விக்கெட்டுகள் எடுத்த 6வது இந்தியர் மற்றும் 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இஷாந்த் ஷர்மா.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், அந்த அணியின் டான் லாரன்ஸை அவுட்டாக்கியபோது இந்த மைல்கல்லை எட்டினார் இஷாந்த்.

கபில்தேவ் மற்றும் ஜாகீர் கான் என்ற 2 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், இதற்கு முன்னர் இந்த சாதனையை செய்துள்ளனர். ஒட்டுமொத்த அளவில் பார்த்தால், அனில் கும்ளே(619), கபில் தேவ்(434), அஸ்வின்(377), ஹர்பஜன்(417), ஜாகீர் கான்(311) என்ற 5 பேர் இந்த சாதனையை செய்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் இஷாந்தும் இணைந்துள்ளார்.

கபில்தேவ் 131 போட்டிகளில் ஆடி 434 விக்கெட்டுகளை சாய்த்தார். இஷாந்த் 98 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை செய்துள்ளார். ஆனால், ஜாகீர் கான் 92 போட்டிகளிலேயே 311 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பெரிய இலக்கு குறித்து கேட்டபோது, “நாளை காலை எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தால், அந்த இலக்கை எங்களால் அடைய முடியும். எங்களிடம் தைரியமான பேட்ஸ்மென்கள் உள்ளனர். எனவே, நாங்கள் நேர்மறை சிந்தனையுடனேயே உள்ளோம்” என்றார் இஷாந்த்.