ண்டன்

பிரிட்டனில் சட்டப்பூர்வமாக மற்றும் சட்ட விரோதமாக வசிக்கும் அனைத்து  புலம்பெயர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

அகில உலக அளவில் கொரோனா  பாதிப்பில் பிரிட்டன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 39.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.12 லட்சத்துக்கும் மேலானோர் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 19.16 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  பிரிட்டனில் தற்போது சுகாதாரப் பணியாளர்கள், வயது முதிர்ந்தோர் போன்றோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட மக்கள் பெருமளவில் பதிவு செய்து வருகின்றனர்.  பிரிட்டனில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்.  அவற்றில் ஒரு சிலர் சட்ட விரோதமாகக் குடிபுகுந்த புலம்பெயர் வெளிநாடு வாசிகள் ஆவார்கள். தற்போது இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா என்பதில் குழப்பம் உண்டானது.

இந்நிலையில் இன்று பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பிரிட்டனில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிவு செய்யும் தகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது அவர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து பணி புரிபவர்களாக இருப்பினும் நோயிலிருந்து தங்களைப்  பாதுகாக்க உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.