சென்னை: சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இன்று காலை  புறப்பட்ட சசிகலா,இன்று நள்ளிரவு சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே அவர் தங்கியிருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்பட்டு விட்டதால், சசிகலா தனது உறவினராக கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானத்தை மீறி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார்.  முன்னதாக அவர் புறப்பட்ட காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக எல்லைப்பகுதி வந்ததும், தனது காரில் இருந்த கொடியை அகற்றியதுடன், அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் ஏறி பயணம் செய்து வந்தார். அதனால், அவர் பயணம் செய்யும் காரில் இருந்து கொடியை அகற்றுவதில் சிக்கல் எழுந்தது.

இந்த நிலையில், தற்போது, காரில் இருந்து பிரசார வாகனத்துக்கு மாறியுள்ளாபக கூறப்படுகிறது. ஏற்கனவே தனது காரில் பெங்களுரில் இருந்து பயணம் செய்த சசிகலா, பின்னர் சூளகிரி பகுதி அதிமுக நிர்வாகியின் காரில் பயணம் செய்தததாக கூறப்பட்டது.  அதுபோல, அந்த கார் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவருக்கு என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,  சசிகலாவுக்கு அமமுகவினர் அளித்து வரும் வரவேற்பு காரணமாக, அவரது சென்னை வருகை தாமதமாகி வருகிறது. காலை  11 மணியளவில் ஜூஜூவாடி பகுதிக்கு வந்தடைந்த நிலையில், இடையிடையே, கோவில்களுக்கு சென்றும் தரிசனம் செய்து வருகிறார்.  ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டவர், பின்னர், பிரத்தியங்கரா தேவி கோவிலுக்கு சென்று நில நிமிடம் தியானம் செய்தார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி வர அவருக்கு மேலும் 4 மணி நேரம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மதியம் 3 அளவிலேயே சசிகலா கிருஷ்ணகிரியை தாண்டியதுள்ளதாகவும், அங்கிருந்து சென்னை சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாலும், கட்சியினர் தொடர்ந்து ஆங்காங்கே வரவேற்பு கொடுத்து வருவதால், சசிகலாவின் சென்னை வருகை தாமதமாகி வருகிறது.

சாதாரணமாக கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்னை வந்தால் 5 மணி நேரம் ஆகும். ஆனால், சசிகலாவை வரவேற்க கட்சியினர் திரண்டுள்ளதால், அவர் சென்னை வந்தடைய நள்ளிரவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வந்தடையும் சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், நள்ளிரவில் சென்னை வரும் சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்துக்கோ, ஜெ.சமாதிக்கோ செல்ல முடியாதவாறு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெயிலுக்கு போகும்வரை,போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் தங்கியிருந்த சசிகலா, தற்போது, அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டு, நினைவில்ல மாக மாற்றப்பட்டுள்ளதால், அங்கு சசிகலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஜெ. வீடு அருகே இருந்த சசிகலாவுக்கு சொந்தமான இடமும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதால், சசிகலா, அவரது உறவினரான கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

கிருஷ்ணப்பிரியா,  சசிகலாவுடன் விடுதலையாகி சென்னை திரும்பும் இளவரசியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.