சென்னை

சென்னை மாநகரில் தி நகர், அண்ணா நகர் மற்றும் பெசண்ட் நகரில் புதிய வாகன நிறுத்தும் இடங்களை முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

சென்னை மாநகரில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் பல இடங்களில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.  இதையொட்டி  போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் புதிய வாகன நிறுத்திடும் இடங்களைச் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

இதில் முதல் கட்டமாக அதிக வாகன நெரிசல் உள்ள அண்ணா நகர், தியாகராய நகர் மற்றும் பெசண்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இதை காணொளி காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்துள்ளார்.

அத்துடன் திருவொற்றியூர், சூரப்பேட்டை, புத்தகரம், கதிர்வேடு, மாதவரம், அம்பத்தூர், நொளம்புர், மதுரவாயல், உள்ளகரம், புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர், மற்றும் காரப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் அகற்றும் நிலையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் 1.5 லட்சம் வீடுகள் பயனடைய உள்ளன.

இதைத் தவிர நகரின் 200 பகுதிகளில் சுமார் ரூ.6.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் அளக்கும் டிஜிட்டல் இயந்திரங்களையும், ரூ,52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை அளவு கருவிகளையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.  இந்நிகழ்வின் போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் மாநகர ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.