திருச்சி:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில், கடந்த 22-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு முறையீட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அதற்கான தெளிவான விளக்கங்களை தருவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என்றும்,ஸ்டாலின் முதல்வரனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சாத்தி்யமாகும் என உறுதியாக தெரிவித்தார்.