கடலூர்:
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனங்களை 27.01.2021 நாளிட்ட உயர்கல்வி  துறை அரசாணை எண் 16-ன் வாயிலாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் உள்ளதைப் போன்று கல்விக் கட்டணம் செலுத்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.

அதாவது எம்.பி.பி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.13,610-ம், பி.டி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.11,610-ம், பட்ட மேற்படிப்புகள் பாடப் பிரிவிற்கு ரூ.30,000-ம், பட்ட மேற்படிப்பு பட்டய பாடப் பிரிவிற்கு ரூ.20,000-ம், பி.எஸ்.சி. (செவிலியர்), இயன் முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் ஆகிய பாடப் பிரிவிற்கு ரூ.5,000-ம் கல்விக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டணம் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும் இனி வருங்காலங்களில் இக்கல்லூரியில் பயில உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, எஞ்சிய கட்டணம் திருப்பித் தரப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.