மும்பை: தற்போது நடைபெற்றுவரும் சையது முஷ்டாக் அலி டி-20 கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு, இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி.

கோப்பைக்கான இறுதிப் போட்டியில், பரோடா அணியை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. தமிழக அணியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட திண்டுகல்லைச் சேர்ந்த எம். முகம்மது, 4 ஓவர்கள் வீசி, 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. ஹரிநிசாந்த் (4), பாபா அபராஜித் (2) ஆகியோர் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தமிழ்நாடு அணி.

அதேசமயம் 3வது விக்கெட்டுக்கு ஜெகதீசன் – அருண் கார்த்திக் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஜெகதீசன் நிதானமாக ஆட, கார்த்திக் அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். ஜெகதீசன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், அருண் கார்த்திக்குடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். மறுபுறம் அருண் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அருண் காரத்திக் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல்  இருந்தார்.

தமிழக அணி, 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் தமிழ்நாடு அணி, சையது முஷ்டாக் அலி கோப்பையில் தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை பைனலில் கர்நாடக அணியிடம் தமிழக அணி தோல்வி அடைந்தது.