லண்டன்: இந்தியாவுக்கு எதிராக வலுவான இங்கிலாந்து அணியை, டெஸ்ட் போட்டிக்கு களமிறக்காமல் போனால், அது இங்கிலாந்து ரசிகர்கள், பிசிசிஐ மற்றும் இந்திய அணி ஆகியோரை அவமதித்ததாக அர்த்தம் என்றுள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.
இந்தியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ சேர்க்கப்படாதது குறித்து அவர் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “முதல் டெஸ்ட்டில் ஆட இங்கிலாந்து சரியான அணியைத்தான் தேர்வு செய்துள்ளதா? என்பது பற்றிய பெரிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதுபோல் இந்தியாவில் வெற்றி பெறுவதும் முக்கியம். எனவே, சிறந்த அணியை களமிறக்காமல் விட்டால் அது பிசிசிஐ, இந்திய அணி, இங்கிலாந்து ரசிகர்கள் ஆகியோரை அவமதிக்கும் செயலாகும்.
பேர்ஸ்டோ விளையாட வேண்டும்; அதே போல் பிராட், ஆண்டர்சன் ஆட வேண்டும். இங்கிலாந்தின் சிறந்த வீரர்கள் இந்தியாவுடன் அதிகப் போட்டிகளில் ஆட விரும்புவார்கள். அவர்களைத் தேர்வு செய்யுங்கள். அதன்பிறகு அவர்கள் ஐபிஎல் செல்வார்கள், பணம் சம்பாதிப்பார்கள். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் பணம்தான் ராஜா. அது ஒரு வர்த்தகம். அதன்பிறகு அவர்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளட்டும்” என்றுள்ளார் பீட்டர்சன்.