கொல்கத்தா: இந்தியாவிற்கு சுழற்சி முறையில் செயல்படும் வகையில், மொத்தம் 4 தலைநகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாளில் நடைபெற்ற நினைவுப் பேரணியில் பங்கேற்றபோது இந்த கருத்தை முன்வைத்தார் மம்தா பானர்ஜி.
அவர் பேசியுள்ளதாவது, “எதற்காக ஒரேயொரு தேசிய தலைநகரம் மட்டுமே இருக்க வேண்டும்? நாட்டின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு திசைகளுக்கு சேர்த்து 4 தலைநகரங்களை நிர்மாணிக்கலாமே?
இந்த 4 தலைநகரங்களையும் சுழற்சி முறையில் செயல்பட வைக்கலாமே? அனைத்து நடவடிக்கைகளையுமே டெல்லியிலேயே முடக்கிவிட வேண்டுமா? இந்தக் கோரிக்கைக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். ‘ஒரு நாடு, ஒரு தலைவர்’ என்ற கருத்தாக்கத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றுள்ளார் மம்தா பானர்ஜி.
இத்தனை நாட்களாக இல்லாமல், இப்போது திடீரென்று இத்தகைய கோரிக்கையை மம்தா பானர்ஜி எழுப்பக் காரணம், சட்டமன்ற தேர்தல்தான் என்ற கருத்தை வலுவாக முன்வைத்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள். இதன்மூலம், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.