டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 2வது கட்ட தடுப்பூசி போடும் பணியில், பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்கள், அமைச்சர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிர்க்கொல்லி நோயானா கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்கும் வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின், அஸ்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இநத் தடுப்பூசிகள் கடந்த 16ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.
இதற்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதும், 2 பேர் உயிரிழந்துள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தடுப்பூசி போடுவதில் மருத்துவர்கள் உள்பட பலரும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தகர்கள் தடுப்பூசி போட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் 2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநிலங்களின் முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் 50-வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் 2-வது கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறத.
மக்களுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.