வுகாத்தி

சாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.  இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகள் பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  அசாம் மாநிலத்தில் 1,90,000 பணியாளர்களுக்கு மொத்தம் 3,80,000 டோஸ் தடுப்பூசிகள் தேவை உள்ள நிலையில் இங்கு 2,21,500 டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றில் 2,01,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஆகும். மீதமுள்ள 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும்.  இங்கு இதுவரை 5,542 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தடுப்பூசி போட்டுக் கொண்டோரில் யாருக்கும் எவ்வித எதிர் விளைவுகளும் இம்மாநிலத்தில் பதிவாகவில்லை.   இந்நிலையில் இம்மாநிலத்தில் உள்ள சிர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1000 டோஸ்கள் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு நடத்தியதில் இந்த மருந்துகள் இம்மருத்துவமனையில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கில் நடந்த தொழில்நுட்ப கோளாற்றால் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த மருந்துகளை எடுத்துச் சென்ற ஊழியர்கள் கிடங்கில் இருந்து எடுத்துச் செல்லும் போதே உறைந்த நிலையில் இருந்ததால் இது குறித்து முழுமையான விசாரணை நடந்த பிறகே காரணங்கள் தெரிய வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

உறைந்த இந்த மருந்துகள் சோதனை சாலைக்கு அனுப்பப்பட்டு அதன் திறன்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.   இந்த மருந்துகள் 2-8 டிகிரியில் சேமித்து வைக்க வேண்டிய நிலையில் அவை அதற்கும் குறைவான வெப்ப நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அசாம் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.