“புதிய போர்கள் ஏதும் தொடங்காமல் அமெரிக்காவை மீட்டெடுப்பதில் எனது தலைமையிலான நிர்வாகம் சாதனை படைத்துள்ளது, இதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரியாவிடை கொடுத்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்த்திய இந்த உரையில் “நாங்கள் இங்கு எதற்காக வந்தோமோ அதை செய்துவிட்டோம் – அதற்கு மேலும் செய்துவிட்டோம் – நாம் துவங்கியுள்ள இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெறும்” என்று டிரம்ப் கூறினார்.

தனது நிர்வாகம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமெரிக்க வலிமையை மீட்டெடுத்தது, “உலக வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது”, “மத்திய கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவில், மக்களுக்கு அரசாங்கம் பதிலளித்தது என்ற உன்னத நிலையை எட்டினோம்” என்றும் கூறினார்.

“அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில்” புதிய நிர்வாகத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் கூறினார்.

நம்மீதான நமது தேசிய மகத்துவத்தின் மீதான நம்பிக்கையை இழப்பது மிகப் பெரிய ஆபத்து என்று எச்சரித்தார்.

“எந்தவொரு தேசமும் அதன் சொந்த மதிப்புகள், வரலாறு மற்றும் ஹீரோக்கள் மீதான நம்பிக்கையை இழந்து, நீண்ட காலம் செழிக்க முடியாது – ஏனென்றால் இவை நமது ஒற்றுமை மற்றும் நமது உயிர்ச்சக்தியின் ஆதாரங்கள்” என்று டிரம்ப் கூறினார்.

ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க கேபிடல் மீதான “தாக்குதல்” குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “அனைத்து அமெரிக்கர்களும் திகிலடைந்தனர்” என்றும் அரசியல் வன்முறை “அமெரிக்கர்களாகிய நாம் மதிக்கும் எல்லாவற்றிற்கும் எதிரான தாக்குதல் என்றும் கூறினார். அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு வீடியோவாக வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.