பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், துவக்க வீரராக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஷப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று ரசிகர்களால் புகழப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இரண்டாவது டெஸ்ட்டான மெல்போர்ன் டெஸ்ட்டில்தான் முதல் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 45 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களும் அடித்து அணிக்கு கைக்கொடுத்தார்.
பின்னர், சிட்னி டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் அரைசதமடித்த கில், இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்களை அடித்தார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு அவுட்டான கில், அதற்கு சேர்த்து வைத்தாற்போல், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவிட்டார். இந்திய அணி 328 ரன்கள் டார்க்கெட்டை விரட்டும் இக்கட்டான நேரத்தில், ஒருநாள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், 91 ரன்களை விளாசி அசத்திவிட்டார். இதில் 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகள் அடக்கம்.
இதனையடுத்து, இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஷப்மன் கில் கட்டாயம் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.