சென்னை: சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியையும், கரை வேட்டியையும் கட்சி தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: எங்களது கட்சி கொடியை போன்று 2, 3 கட்சிகளின் கொடிகள் இருப்பதால் தனித்துவம் காட்டும் வகையில் புதிய கொடியை அறிமுகம் செய்துள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.
சங்ககிரி, ஆலங்குளம் தொகுதிகளுக்கு நான் பொறுப்பாளராக இருப்பேன். இந்த 2 தொகுதிகளில் ஒன்றில் நான் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில்தான் தற்போது வரை நீடிக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளோம். திமுக கூட்டணிக்கு எங்களை அழைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை அழைத்தாலும் திமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் சேர்ந்து அரசியல் பயணம் மேற்கொண்ட அனுபவம் எனக்கு உள்ளது. 1996-ம் ஆண்டு தேர்தலில் நான் செய்த பிரசாரமே திமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நிர்வாகிகளை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று கூறினார்.