ஜனவரி 18: இன்று வாழப்பாடி இராமமூர்த்தியின் 81வது பிறந்தநாள்…
தமிழக மக்களுக்காக பதவியை துறந்த ஒரே தமிழர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தி. காவிரி பிரச்சினையாக தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், தனது மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தவர் வாழப்பாடி இராமமூர்த்தி.
கடந்த 1991-ம் ஆண்டு, மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது.
நரசிம்மராவின் அமைச்சரவையில், தொழிலாளர் துறை இணையமைச்சர் பதவியை அலங்கரித்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி .
அந்தக் காலகட்டத்தில், காவிரிப் பிரச்சினை காரணமாக இரு மாநிலங்களுக்கு இடைய போராட்டம், ஆர்ப்பாட்டம் என கனகனவென நெருப்பு பிளம்பாக இருந்தது.
கர்நாடகாவில் இருந்து தமிழர்கள் கன்னட வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டார்கள். பெங்களூரு, மைசூரில் பெரும் கலவரம் வெடித்தது.
அப்போது கர்நாடகாவில் பங்காரப்பா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது.
அதனால், காவிரி பிரச்சினையை சமூகமாக தீர்த்தி மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது. கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டது.
மத்திய அரசின் மாற்றந்தாய் மன்பான்மையை அறிந்த, வாழப்பாடி இராமமூர்த்தி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நரசிம்மராவ் அவரது குரலை கண்டுகொள்ளாததால், கொதித்தெழுந்த வாழப்பாடி ராமமூர்த்தி,1992-ம் ஆண்டு, தன் அமைச்சர் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்தார்.
வாழப்பாடியாரின் அதிரடி நடிக்கை அப்போது பிரமராக இருந்த நரசிம்மராவே ஆடச்செய்தது. வாழப்பாடியாரிடம் இருந்து இத்தகைய அதிரடியை எதிர்பார்க்கவில்லை. அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார்.
ஆனால், பதவிக்காகத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகத்தை சகித்துக்கொண்டு தன்னால் அமைச்சரவையில் தொடர அவர் விரும்பவில்லை என்று கூறிவிட்டு உடனடியாக டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினார்.
அதன்பிறகு எத்தனையோ எம்.பி.க்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையை அலங்கரித்தாலும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிகூட, தமிழக மக்களுக்காகவோ, தமிழக உரிமைக்காகவோ தங்களது உரிமையை நிலைநாட்டவும் இல்லை, தங்களது பதவியை துறக்கவும் முன்வரவில்லை என்பது தமிழக மக்களின் துரதிருஷ்டமே..
வாழப்பாடியாரின் தியாகம் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சமுதாயம் உள்ளவரையிலும் வாழப்பாடியாரின் புகழும் நிலைத்திருக்கும்..
இன்றைய நாளில் அவரை நினைவுகூற வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.