தானாக வந்த வழக்குகள், வலிய இழுத்த வழக்குகள் என பல வழக்குகளில் சிக்கியுள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத், மேலும் ஒரு வழக்கில் சிக்க உள்ளார்.
ஏன்?
கங்கனா ரணாவத் “மனிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி” என்ற இந்திப்படத்தில் நடித்திருந்தார்.
இதன் இரண்டாம் பாகம், “மனிகர்னிகா: ரிட்டர்ன்ஸ் ஆஃப் திட்டா” என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது.
கங்கனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை அவரும், கமல் ஜெயின் என்பவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
காஷ்மீரை ஆண்ட முதல் பெண் அரசி திட்டா என்பவரின், வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதைக்கு எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் என்பவர் உரிமை கோரியுள்ளார்.
இவர் காஷ்மீர் அரசி திட்டாவின் வரலாற்றை “திட்டா – தி வாரியர் குயின் ஆஃப் காஷ்மீர்” என்ற பெயரில் ஆங்கிலத்தில் நாவலாக எழுதி உள்ளார்.
தனது கதையை, தனக்கு தெரியாமல் படமாக்கும் கங்கனாவிடம், ஆஷிஷ் கவுல் முறையிட்ட போது “இது உங்கள் கதை அல்ல” என கங்கனா கூறி விட்டதாக தெரிகிறது.
இதனால் கங்கனா மீது வழக்கு தொடர எழுத்தாளர் ஆஷிஷ் திட்டமிட்டுள்ளார்.
– பா. பாரதி