சென்னை
தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மருந்துகளுக்கு அவசரகால அனுமதி அளித்துள்ளது. இதில் கோவிஷீல்ட் மருந்து மூன்று கட்ட சோதனைகளையும் முடித்துள்ளது,. ஆனால் கோவாக்சின் மருந்து இன்னும் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. ஆயினும் இந்த மருந்துக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கோவாக்சின் மருந்து ஆறு இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு இடத்திலும் 100 ஊசிகள் போடும் திறன் உள்ளன. இந்நிலையில் சென்னையில் 38 பேருக்கும் செங்கல்பட்டில் 20 பேருக்கும், தஞ்சையில் 40 பேருக்கும் புதுக்கோட்டையில் ஒருவருக்குமாக மொத்த 99 பேருக்கு போடப்பட்டுள்ளன.
அடுத்ததாக கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இதுவரை 2684 பேருக்கு போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 310, சேலம் மாவட்டத்தில் 288 மற்றும் திருப்பூர் மாவட்டதில் 195 பேருக்கு போடப்பட்டுள்ளன. மிகவும் குறைந்த பட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று திட்டமிட்டபடி அனைத்து 160 முகாம்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.