சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.417.18 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மதுரை முதலிடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போதுதான் சற்று இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதற்கிடையில், தொற்று காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளையும், மாநில அரசு வருவாய் நோக்கில் சில மாதங்களுக்கு முன்பே திறந்து குடி மக்களிடம் இருந்து பணத்தை கறந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும கடந்த 13, 14ந்தேதிகளில் மட்டும், ரூ.417.18 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை ஆகி உள்ளது.

போகி பண்டிகையான 13ந்தேதி  அன்று ரூ.147 கோடிக்கு மது பானங்கள் விற்பனையானது.

நேற்று (14ந்தேதி) பொங்கல் பண்டிகை தினம்  ரூ.269 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அதிகபட்சாக மதுரை மண்டலத்தில் ரூ. 55.27 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் ரூ.54.47 கோடி, திருச்சி மண்டலத்தில் 56.39 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.50.12 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.50.18 கோடிக்கும் மது விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருவாயானது கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

கடந்த  தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக்கில் ரூ.466கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. எனவே, நேற்றே குடிமகன்கள் இன்றைக்கு தேவையான சரக்குகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து,  ஜனவரி 26 மற்றும் 28ம் தேதி குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.