சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5.56 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பயனர்களுக்கு வழங்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலுத். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக தடுப்பூசிகள் போடுவதற்கான 2 கட்ட ஒத்திகைகள் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த நிலையில், வரும் 16ம் தேதி முதல்கட்டக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. அந்நிறுவனத்திடம் ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு அளித்தது.
அதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசி விலை 200 ரூபாய் ஆகும். ஜிஎஸ்டியுடன் சேர்த்து 210 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து, சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கி உள்ளன.
அதன்படி, தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று (ஜன.,12) வருகிறது. புனேவில் இருந்து விமானத்தில் சென்னை வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு தடுப்பூசி மருந்துகளை ஏற்றி வரும் விமானம் சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, தடுப்பூசிகள் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என கூறப்படுகிறது.