வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகளை டிவிட்டர் மற்றும் யு டியூப் நீக்கி உள்ளது.

அமெரிக்காவில் ஜோ பைடன் இறுதி வெற்றி உறுதி ஆனதையொட்டி டிரம்ப் ஆதரவாளர்கள் கடும் கோபம் அடைந்து வாஷிங்டனை முற்றுகை இட்டனர்.  நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.  கலவரத்தில் ஒரு பெண் உயிர் இழந்துள்ளார்.  இவர்களைக் கலைக்கத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.  உலக நாடுகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த தாக்குதலுக்குச் சிறிது நேரம் முன்பு டிரம்ப் தனது தோல்வி குறித்து அறிவிப்பு வெளியானதும் டிவிட்டரில் வீடியோ பதிவுகளை வெளியிட்டார்.  அந்த டிவீட்டுகளில் அவர் இது போல நிகழ்வுகள்  நடக்கும் எனத் தனது தேர்தல் தோல்வி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  இந்த பதிவு முடிந்து சில நேரத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் வெடித்தது.

இந்த டிவீட்டுகளை உடனடியாக நீக்குமாறு டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்தும் அவர் அந்த டிவீட்டுகளை நீக்கவில்லை.  இதை அடுத்து டிவிட்டர் நிர்வாகம் தானாகவே அந்த பதிவுகளை நீக்கி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  டிரம்ப் அவராகவே நீக்கி இருந்தால் அந்த டிவீட்டுகளை யாராலும் பார்க்க முடியாது,   ஆனால் தற்போது இந்த டிவீட்டுகள் இனி தென்படாது என அறிவிப்பு வந்துள்ளதால் இதை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியது உறுதி ஆகி உள்ளது.

தற்போது டிரம்பின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.  தற்போது அவருடைய ஆதரவாளர்கள் தலைநகர் முற்றுகை நிகழ்த்தி உள்ளதால் இந்த பக்கத்தில் டிரம்ப் மேலும் பதிவுகளை வெளியிடாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதைப் போல் யு டியூபில் டிரம்ப் தலைநகர ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிப்பாக வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் தேர்தலில் பல மோசடிகள் நடந்துள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.  அந்த வீடியோவை யூ டியூப் நிர்வாகம் தங்களது கொள்கைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்து நீக்கி உள்ளது.