சென்னை:  மருத்துவ கலந்தாய்வில் சான்றிதழ் முறைகேடு செய்த ராமநாதபுரம்  மாணவியின் தந்தை தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு கடந்த டிசம்பர்  மாதம் 18ஆம் தேதிலிருந்நு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில்,  ராமநாதபுரத்தைச் சேர்ந்த  மாணவி ஒருவர் நீட் தேர்வு  மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து கலந்தாய்வில் கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்ஷா என்ற மாணவி,  610 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அந்த மாணவி  நீட் தேர்வில்,  27 மதிப்பெண் எடுத்துவிட்டு 610 மதிப்பெண் என போலி  சான்றிதழ் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.  அந்த மாணவி சமர்ப்பித்த சான்றிதழ்  போலியானது என தெரியவந்தது.  இதையடுத்து, காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்படி வழக்கு  சென்னை பெரியமேடு போலிஸார் போலி நீட் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மற்றும், போலி சான்றிதழ் கொடுத்த பரமக்குடி கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  மாணவி தீக்ஷா மற்றும் மாணவியின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் 420 ஏமாற்றுதல், 419- ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464- தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465- பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், 468- ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், 471- பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என குறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களை விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் மாணவியின் தந்தை பாலச்சந்திரனை போலிஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை  11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.