எர்ணாகுளம்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கேரள அணியில் இடம்பெற்று தனது கிரிக்கெட் வாழ்வில் 2வது இன்னிங்ஸை துவக்கவுள்ளார் முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்ரீசாந்திற்கு மொத்தம் 7 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட எதிலும் அவரால் பங்கேற்க முடியாமல் இருந்தது. ஒருவழியாக, தனது தடைக் காலத்தை முடிந்த ஸ்ரீசாந்த், போட்டிகளில் மீண்டும் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் விளையாடும் கேரள அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இம்மாதம் 10ம் தேதி முதல், இத்தொடர் மும்பையில் தொடங்குகிறது. இதுவொரு டி-20 தொடராகும்.
தொடக்கத்தில், உத்தேச அணியில் இடம்பெற்ற ஸ்ரீசாந்த், தற்போது மாநில அணிக்குள் வந்துள்ளார். 7 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையானது கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், ஸ்ரீசாந்த் பங்கேற்கும் முதல் உள்நாட்டுப் போட்டித் தொடர் இதுவாகும்.