டெல்லி: ஜனவரி 1ந்தேதி (நாளை) முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கான அவகாசம் பிப்ரவரி 15ந்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்யவும் தடை ஏற்பட்டு வந்தது. இதையடுதது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டையை வாகனங்களில் பொருத்தும் முறையை மத்திய அரசு கொண்டுவந்தது.
இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்று அதை வாகனத்தின் முன்பக்கத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இதனால், சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கண்டிப்பாக பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டது. இதற்கான பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என அறிவித்திருந்தது.
இதனால், சுங்கச்சாவடிகள் பக்கத்தில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டு, பாஸ்டேக் விநியோகம் ஜரூராக நடைபெற்ற வந்தது.
இந்த நிலையில், தற்போது, பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கு அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வருகின்ற, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், தற்போதைய நிலையில், சுங்க சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாகனங்களில் பாஸ்டேக் அட்டை உள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.