மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் மோசமான பேட்டிங்கை விமர்சித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
அவர் கூறியுள்ளதாவது, “மெல்போர்ன் பிட்சில் எந்த பூதமும் ஒளிந்திருக்கவில்லை. அது நல்ல பிட்ச்தான். ஆனால், ஆஸ்திரேலிய பேட்டிங்தான் மோசம். இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மோசமான ஷாட்களை ஆடினர் ஆஸ்திரேலியர்கள்.
சுழற்பந்து வீச்சிற்கு பிட்ச் ஒத்துழைத்தது என்பது உண்மைதான். ஆனால், அஸ்வின் போன்ற நல்ல பவுலர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தைரியம் காட்டியிருக்க வேண்டும்.
நல்ல பவுலர்கள் மோசமான பந்துகளை வீசப் போவதில்லை. எனவே, நாம்தான் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எப்போது அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போது மோசமான ஷாட்கள் அடிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உண்மையிலேயே மிக மிக மோசம்” என்றுள்ளார் பாண்டிங்.