டில்லி
வரும் ஜனவரி மாதம் முதல் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலை 10% வரை உயர உள்ளது.
கொரோனா ஊரடங்கால் டிவி பேனல்கள் போன்ற உதிரி பாகங்களின் உற்பத்திசர்வதேச அளவில் குறைந்துள்ளது. இதையொட்டி டிவி பேனல்கள் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் விலையும் அதிகரித்துள்ளது. ஆகவே மூலப்பொருட்கள் பற்றாக்குறை, விலை உயர்வு எனப் பல அம்சங்களாலும் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களில் விலையை உயர்த்த வேண்டி உள்ளதாக எல் ஜி, பானசோனிக், தாம்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் கூறுகின்றன. சோனி நிறுவனமும் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு ஜனவரி மாதம் 6 முதல் 7% வரை இருக்கும் எனவும் மார்ச் மாதத்துக்குள் 10% வரை விலை உயர்வு இருக்கும் எனவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கோத்ரெஜ் தலைமை நிர்வாக அதிகாரி கமால் நந்தி, “மூலப்பொருட்களின் விலை மட்டும் இன்றி அதற்கான விமான போக்குவரத்து கட்டணமும் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. அதுவும் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறது. ஆகவே வேறு வழியின்றி ஜனவரி முதல் நாங்கள் உற்பத்தி செய்யும் வீட்டு உபயோக பொருட்களின் விலையை 8 முதல் 10% வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.