மும்பை
நேற்று மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை ஆகும். அதிக கொரோனா பாதிப்பு உள்ள மும்பை நகரில் உள்ள தாராவி பகுதி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி ஆகும். இங்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதி அதிக நெரிசலுடன் சுகாதாரம் அற்று காணப்படும் பகுதியாகும்.
எனவே இங்கு கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இதையொட்டி சுகாதார வல்லுநர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை, தனிமை, சிகிச்சை எனத் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்களும் இதற்குப் பெருமளவில் ஒத்துழைப்பு அளித்தனர். அதன் பலனாக கொரோனா இங்கு முழுமையாக ஒழிந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் மொத்தம் 3788 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3464 பேர் முழுமையாகக் குணம் அடைந்துள்ளனர். தற்போது 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் முறையாக தாராவி பகுதியில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இது மும்பை மக்களை மட்டுமின்றி இந்திய அளவில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.