திருவனந்தபுரம்: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என கேரள மாநில அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட கேரள மாநில ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார். இதன் காரணமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, அதை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் போராடி வருகிறார்கள். டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 28வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையில், போராடி வரும் விவசாயிகளின் 40 அமைப்புகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியை தழுவி உள்ளது.சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மத்தியஅரசு மீண்டும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. அதுபோல, கேரள மாநில அரசும் சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வை கூட்டி 23ந்தேதி (இன்று) தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அறிவித்தது. இது தொடர்பாக கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதை மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநர் மறுத்துவிட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு அவகாசம் தேவை என்றும், வேளாண்சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதில் அவசரம் காட்ட முடியாது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.