ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவலின் மூலத்தை ஆய்வுசெய்யும் வகையில், சீனாவின் வூஹான் பகுதிக்கு, உலகளாவிய நிபுணர்களின் குழு ஒன்று செல்லவுள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில், இந்தக் குழுவானது சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில், அந்தக் குழுவிற்கான தனிமைப்படுத்திக் கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“கொரோனா தொற்று மனிதர்களில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உண்மையான இடத்திற்கு செல்வதுதான் அந்தக் குழுவின் நோக்கம். அந்தக் குழுவினர், தங்களுடைய சீன நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும், அடுத்த 3 முதல் 6 மாதங்கள், இந்த உலகிற்கு கடினமான ஒன்றாக இருக்கும்” என்றுள்ளார் WHO அமைப்பின் அவசரகால துறையின் தலைவர் டாக்டர்.மைக்கேல் ரியான்.