சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எப்போதும் போல பதில் அளித்துள்ளார்.
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் கொரோனா நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக திறக்கப்பட்டு உள்ளன. அண்டை மாநிலங்களான புதுச்சேரி,ஆந்திர மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஜனவரி 4ந்தேதி முதல், புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், எப்போதும் போல, இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என கூலாக தெரிவித்தார். மேலும், 9ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்புகளுக்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழகஅரசு வாய்மூடி மவுனியாகவே இருந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பள்ளிக்கு வரும் மாணாக்கர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால், வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற நோக்கில், மாணாவர்களின் எதிர்காலத்தை பாழடித்து வருகிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளும், அரசியலே செய்து வருகின்றன.