டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அறிவித்துள்ள பாரதிய கிசான் சங்கம், சட்டங்களில் சில திருத்தங்கள் செய்தாலே போதுமானது, இதற்காக விவசாயிகள் போராட்டம் தேவையில்லாதது என தெரிவித்து உள்ளது.
பாரதிய கிசான் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இதில் வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பாரதிய கிசான் சங்கத்தினுடைய தேசியச் செயலாளர் பெருமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை, பாரதிய கிசான் சங்கம் முழுமையாக வரவேற்கிறது. இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல, என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். இருப்பினும் அந்தச் சட்டத்தில் மூன்று வகையான திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று பாரதிய கிசான் சங்கம் சார்பில் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை வைத்துள்ளோம்.
மத்திய அரசு கொண்டு வந்த இந்த வேளாண் சட்டத்தில் முழுமையாக அதனைத் திரும்பப் பெறாமல் ஒரு சில திருத்தங்களைச் செய்தால் மட்டுமே போதும். இந்தியா முழுவதும் உள்ள 23 ஆயிரம் பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த கிளைகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த மூன்று சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். விரைவில் அந்த மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில், மாவட்டந்தோறும் உள்ள மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து, அந்தந்த மொழிகளில் இந்தியா முழுவதும் கொண்டுபோய்ச் சேர்க்க ஒரு கையேடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவசாயச் சட்டத்தின் மூலம், மண்டி மற்றும் இடைத்தரகர்கள் அனைவரும் முழுமையாக அகற்றப்பட்டு, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்கு, நியாயமான விலையை, அவர்களே நிர்ணயம் செய்ய, ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த விவசாயிகளையும் கட்டாயப்படுத்தி அவர்களோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதில்லை. விவசாயிகள் விரும்பினால் மட்டுமே இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். இந்தப் போராட்டம் தேவையில்லாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. எனவேதான் பாரதிய கிசான் சங்கம் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாநிலத் தலைவர் ஆர்.சுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.பார்த்தசாரதி, மாநில அமைப்புச் செயலாளர் சி.எஸ்.குமார், மாநில செய்தித் தொடர்பாளர் என்.வீரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.