நாகை: புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பற்றிய அறிக்கை ஓரிரு நாட்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று மாநில வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கருங்கண்ணி, வடக்கு பனையூர் ஆகிய கிராமங்களில், புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் புரெவி புயலால் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள், தோட்டக் கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. 33 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையாக, வேளாண் அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்துக்குள் இந்த கணக்கெடுக்கும் நிறைவுபெற்று, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். பயிர்ச் சேதம் தொடர்பான அறிக்கை அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.