சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சில சிறப்பு ரயில்கள் அடுத்த மாதம் 17 ஆம் தேதியில் இருந்து 29 ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு தைமாதத்தில் நடைபெற உள்ள தைப்பூச விழாவில் கலந்துகொள்ள  நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிவார்கள். ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் தைப்பூச விழா விற்கு மாலை அணிந்து, இருமுடி கட்டி, விரதமிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.

இதன் காரணமாக, பக்தர்களின் வசதிக்காக, மேல்மருத்தூர் வழியாக செல்லும் அனைத்து சிறப்பு ரயில்களும்,  மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.