இந்தியாவில் மாருதி கார் தொழிற்சாலை உருவாக காரணமானவரும், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி பிறந்த தினம் இன்று…
சஞ்சய்காந்தி 1946ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி அன்று இந்திராகாந்தி பெரோஸ் காந்தியின் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்ததார். 1வது வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை தனது சகோதரர் ராஜீவ் உடன் வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்சய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, டெல்லியில் பயின்றார்.
படிப்பில் ஆர்வம் இல்லாத சஞ்சய், செல்வந்தர்கசளின் வீட்டுப் பிள்ளைகள் தங்கி படிக்கும் டேராடூனில் உள்ள டூன் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் அடிக்கடி உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து அழைத்து வரப்பட்டார்.
சஞ்சய்க்கு படிப்பைவிட விலங்குகளிடமும், பறவைகளிடமும் அலாதி பிரியம் உண்டு. இதற்காக அவரது தாத்தா நேரு, தங்களது பாரம்பரிய பங்களாவான அலகாபாத் தீன் மூர்த்தி பவனில் ‘குட்டி மிருகக் காட்சி சாலை’யை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி, கார்கள் மீது சஞ்சய்க்கு கொள்ளைப்பிரியம். எங்கே காரைப் பார்த்தாலும் அதற்குள் சென்று ஆராய்ந்து பார்க்க ஆசைப்பட்டார்.
இதற்கிடையில், 1974-ம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அது, அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின.
1975-ம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப்படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். இந்த காலக்கட்டத்தில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்சய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது.
அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. பின்னர், 1979 ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின.
அதையடுத்து, 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர்.
இதையடுத்து, சஞ்சய் காந்தியின் கனவு நிறைவேறத் தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி நிறுவனம் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. மாருதி நிறுவனம் சுசுகி அல்டோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி 800 காரை தான் முதன் முதலில் வெளியிட்டது. இந்த மாடல் வெளியிடப்படும் போது இதுதான் மாடர்ன் காராக இருந்தது. மேலும் அப்போது போட்டிக்கு ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் மற்றும் பிரீமியர் பத்மினி என இரண்டே மாடல்கள் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
37 ஆண்டுகளுக்கு முன்பு மாருதி என்ற சிறிய ரக காரை இந்தியாவில் தயாரிக்க காரணமாக அமைந்த, மறைந்த சஞ்சய்காந்தியின் பிறந்த தினம் இன்று. மாருதி உள்ள வரை சஞ்சயின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.