சென்னை: மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா கிளஸ்டராக ஐஐடி மாறியுள்ளதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இது நமக்கு ஒரு பாடம் என எச்சரிக்கை செய்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மத்தியஅரசு அறிவித்த லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்பது மாதங்களாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பின்னர் அரசு அறிவித்த தளர்வுகளால், ஆன்லைன் மூலம் பாடங்கள் போதிக்கப்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து, மத்தியஅரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக, மூடப்பட்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் கடந்த 7ம் தேதிமுதல் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன், முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், ஐந்து ஊழியர்கள் உட்பட மொத்தம் 71 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள ஐஐடி மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை ஐஐடியில் இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 33 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது. ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. இது நமக்கு ஒரு பாடமாகும். இதை பொதுமக்கள், மாணவர்கள் பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஐஐடி கேண்டீனில் மாணவர்கள் மொத்தமாக அமர்ந்து, உணவருந்தாமல், உணவை விடுதிக்கு எடுத்துச்சென்று சாப்பிட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்திற்கு சென்று சுகாதாரத்துறை அமைச்சரும் நானும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐஐடி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர் விடுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விடுதியில் இருக்கும் மாணவர்கள் தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுமாறும், நூலகம் உள்ளிட்டவை உடனடியாக மூடப்படுவதாகவும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.