ஐதராபாத்: இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பயணித்த கார் தெலுங்கானாவில் விபத்தில் சிக்கியது.
ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தனி செயலாளருடன் காரில் சென்றுள்ளார். ஐதராபாத்,விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. யாதத்ரி புவாங்கிரி மாவட்டத்தில் உள்ள கைதாபுரம் அருகே கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையை விட்டு கீழிறங்கி அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீஸ் உயரதிகாரி வெங்கண்ணா கூறியதாவது:
சம்பவம் நடந்த நேரத்தில், ஆளுநர் தமது தனிப்பட்ட உதவியாளர் மற்றும் செயலாளருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே சென்றது.
ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து இறங்கி ஒரு மரத்தில் மோதி நின்றது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். இருப்பினும், விபத்து நிகழ்ந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.