டெல்லி: குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் மக்கள் 130 கோடியை தாண்டியுள்ள நிலையில், நாடு முழுவதும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல் படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அஸ்வினிகுமாா் உபாத்யாயா என்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குடும்பம் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையில்தான் சட்டம் இயற்றப்பட வேண்டும். நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்தியஅரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காகவே, ‘தேசிய மக்கள் தொகை கொள்கை- 2000’ அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில், 2025-ம் ஆண்டுக்குள் தேசிய கருத்தரிப்பு விகிதத்தை 2.1 சதவீதமாக குறைப்பதற்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த சீா்திருத்தங்களை மாநிலங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்ற பணிகளை மட்டுமே மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளும். மாறாக, மத்திய அரசுக்கு இதில் நேரடி பங்கு எதுவும் கிடையாது
தம்பதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று அவா்களே தீா்மானித்து, அதற்கு ஏற்ற குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அவா்களே தோ்வு செய்துகொள்ளும் வகையில்தான், குடும்பநலத் திட்ட நடைமுறைகள் நாட்டில் அமைந்திருக்கின்றன.
மக்கள் தொகைபெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி மக்களை கட்டாயப்படுத்தவோ, திணிக்கவோ முடியாது. இத்தனை குழந்தைகளைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த முடியாது.
குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்துவது எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, மக்கள்தொகை பரவலின் சிதைவுக்கும் வழிவகுத்துவிடும் என்பதை சா்வதேச அனுபவங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. அதனால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவது இயலாததாகும்.
மேம்பாட்டுக்கான 1994-ஆம் ஆண்டு சா்வதேச மாநாட்டின் செயல் திட்டத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அதன்படி, மக்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாகத் திணிப்பதற்கு இந்தியா எதிராக உள்ளது. இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி அரசு தெளிவாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.