சென்னை: கொரோனா தொற்றால் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட மெரினா கடற்கரை இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லலாம் ஆனால், மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியான, சுற்றுலாத்தலங்கள் மற்றும் சென்னை மக்களின் பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரையும் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக வழங்கப்பட்டு வந்த பல தளர்வுகளில், போக்குவரத்து, நிறுவனங்கள் தொடங்க அனமதி வழங்கப்பட்ட நிலையில், பொழுதுபோக்கு இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நவம்பர் 30ந்தேதி தமிழகஅரசு வெளியிட்ட பொது ஊரடங்கு உத்தரவு, தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவித்ததுடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14ஆம் தேதி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதாகவும், சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மெரினா கடற்கரை நாளை மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் இன்று கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெரினாவில் தினமும் நடைபயிற்சி செய்பவர்களும் இன்று முதல் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முகக்கவசம் அணியாமல் கடற்கரைக்கு வருபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.