சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது 3வது அணி அமைப்பதா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து பேசிய பிரேமலதா, தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் நடக்கும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.