சென்னை

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக பாஜக அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி புதிய  பாராளுமன்றக் கட்டிடம் கட்டப்படும் என அறிவித்ததில் இருந்தே அதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா எனப் பலரும் கேள்விகள் கேட்டனர்.   ஆனால் மத்திய அரசு இவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

இந்த கட்டுமானப் பணியை டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டதால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு பூமி பூஜைக்கு அனுமதி வ்ழங்கபட்டது. கடந்த 10 ஆம் தேதி அன்று ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த கட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பூமி பூஜை நடத்தி உள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில், “சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?” எனப் பதிந்துள்ளார்.,

அதன் தொடர்ச்சியாக அவர், “பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே….” எனப் பதிந்துள்ளார்.