கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்றபோது, அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்த சிலர் தாக்குதல் நடத்தினர். கற்களை வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாகவும் எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விஷயத்தில் பாஜக தலைவர் நட்டா நாடகம் ஆடுவதாகவும், அவரது கார் அணிவகுப்பில் உள்ள ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் ஆத்திரத்தில் கற்களை வீசியிருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.
‘அனைத்து மத்திய படைகளையும் தனது வசம் வைத்திருக்கும் பாஜகவால், தனது கட்சித் தலைவரை மேற்குவங்க சுற்றுப்பயணத்தின்போது பாதுகாக்க முடியவில்லையா? இத்தனை பாதுகாப்பு இருந்தும் நட்டா மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த முடியுமா?
இது விபத்துக்குப் பிறகு பொதுமக்களின் கோபத்தின் விளைவாக இருக்கலாம். அது ஒரு சிறிய சம்பவமாகக்கூட இருக்கலாம். ஒரு தேநீர் கடையில், உங்கள் வாகன அணிவகுப்பில் இருந்த 50 கார்களில் ஒன்று யார் மீதாவது இடித்திருக்கலாம், அல்லது ஏதேனும் வீசப்பட்டிருக்கலாம். காவல்துறை விசாரணை நடத்தும். நீங்கள் கூறும் பொய்களையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். போதும் போதும்’ என மம்தா எச்சரித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி வெற்றி பெற்ற தொகுதி டயமண்ட் ஹார்பர் என்பது குறிப்பிடத்தக்கது.