புதுடெல்லி :
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம், நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச விவசாயிகளும் இவர்களின் போராட்டத்தில் இணைந்து வருகிறார்கள்.
விவசாயிகள் யாரும் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து விடாமல் பல்வேறு தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த மாநிலங்களை சேர்ந்த டெல்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் உதவியை தடுக்க, டெல்லியில் உள்ள தலைவர்களை வீட்டு காவலில் வைத்துள்ளது.
இந்நிலையில், கடும் பணியிலும் குளிரிலும் இரவு பகல் பாராது டெல்லி எல்லையில் குடும்பம் குடும்பமாக போராடி வரும் விவசாயிகள் தங்கள் பசியாற தாங்களே உணவு சமைத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் போராட்ட களம் நோக்கி விவசாயிகள் அதிகளவில் படையெடுப்பதால், உணவு தயாரிக்க தேவையான அனைத்து வசதிகளுடன் வந்திருக்கும் இவர்கள், மணிக்கு 1500 முதல் 2000 சப்பாத்திகள் வரை தயார் செய்யும் இயந்திரத்துடன் களத்தில் இறங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேளாண் சட்டங்களில் திருத்தங்களை செய்து தருவதாக மத்திய அரசு கூறிய வரைவு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாத விவசாய சங்கங்கள், நாளை டெல்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.