டெல்லி: ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இனி மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என யுஜிசி அறிவித்து உள்ளது.
ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், மருத்துவ முதுகலை படிப்பு உள்பட ஆராய்ச்சி படிப்புகளுக்கு மத்தியஅரசு ஸ்டைபண்டு எனப்படும் கல்வித் உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால், சில தனியார் கல்லூரிகள், இந்த உதவித்தொகை விவகாரத்தில் மோசடி செய்துவருவதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை இனி மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என யுஜிசி அறிவித்து உள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ரஜனிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட்ட ஆராய்ச்சி உதவித்தொகை இனி மாதந்தோறும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். புதிய வழிமுறைகளின்படி அக்டோபர் மாதம் வரைக்கான உதவித்தொகை மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து தாமதத்தைத் தவிர்க்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஏஐசிடியி, முதுகலைப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை அறிவித்தது. அதன்படி, இந்த உதவித் தொகை பெற கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம். மேலும், மாணவர்கள் முழுநேர முதுகலைப் படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். பகுதிநேரப் படிப்பு படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற முடியாது. படிப்பு முடியும்வரை அல்லது 24 மாதங்கள் என எது சீக்கிரம் வருகிறதோ அதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஓபிசி க்ரீமிலேயர் பிரிவின் கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மற்ற பிரிவினருக்கு உரியச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் உதவித்தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.