சென்னை: திநகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் சங்க விவகாரத்தில், முன்னாள் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் இந்த தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.