மாஸ்கோ

ஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப் பல நாடுகளில் மூன்றாம் கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளன.   இதில் ரஷ்யாவின் கண்டு பிடிப்பான ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  மற்றொரு தடுப்பூசியும் விரைவில் ஒப்புதல் பெற உள்ளது.   இரண்டு முறை ஊசி மூலம் அளிக்கப்படும் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி 92% திறன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 10 கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முரஷிகோ இதுவரை ரஷ்யாவில் சோதனை நிமித்தமாக 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதின் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாஸ்கோவில் 70 இடங்களில் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.  இதற்காக ஆன்லைன் மூலம் நாளை முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளது.   இதில் சமூகப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் 18 முதல் 60 வயதான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  மீதமுள்ளோருக்கும் விரைவில் இலவச தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.  இந்த முன்பதிவுக்கு மாஸ்கோவில் வசிப்பதற்கான இருப்பிட சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது.