சென்னை: 20சதவிகித இடஒதுக்கீடு கோரி அமைதியான போராட்டம் என்ற பெயரில் அடாவடி செய்தும், ரயில்கள் பேருந்துகளின் மீது கற்களை வீசி கலவரம் செய்யும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரியும் முறையிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு வேலையில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு பாமக சார்பில் நேற்று முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய போராட்டத்தின்போது அரசின் தடை உத்தரவை மீறி பல மாவட்டங்களில் இருந்து பாமகவினர் சென்னை திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட எல்லையில் அவர்களை தடுத்த நிறுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் கல்வீச்சு, சாலை மறியல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல சென்னையில் இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் மீதும் கல்வீச்சு நடைபெற்றது. இதனால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பாமகவினரின் அடாவடி செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் தாங்கள் மரம்வெட்டி என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. பாமகவைச் சேர்ந்த வன்னியர்களின் போராட்டம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிமுகஅரசும் சோடை போனது. இதற்கு பொதுமக்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து பாமகவை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த நிலையில், இன்று பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது கடும் நடவடிக்கை தேவை, அதற்கு உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது. போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக, போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய பத்திரிகையாளர் வாராஹி என்பவர் முறையீடு செய்துள்ளார். மேலும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மீது வழக்கு பதிய கோரிக்கை விடுத்துள்ளார்.