ஐதராபாத்: பேறுகாலத்திற்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாடுவோமா? என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா.
தற்போது 34 வயதாகும் சானியா மிர்ஸாவுக்கு, கடந்த 2018ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. ஆனால், அதன்பிறகும் மனம் தளராமல் களம் கண்டு, 2020ம் ஆண்டின் டபிள்யூடிஏ ஹோபர்ட் இன்டர்நேஷனல் 2020 போட்டியில் கலந்துகொண்டு, இரட்டையர் பட்டத்தை வென்றார்.
அவர் கூறியுள்ளதாவது, “மகப்பேறு என்னை ஒரு மேம்பட்ட பெண்ணாக மாற்றியுள்ளது. அந்த அனுபவத்தை எனது வாழ்க்கையில் முதன்முறையாக பெற்றேன். அதை அனுபவித்தால்தான் அதன் உண்மையான பரிமாணம் புரியவரும்.
அது, உங்களை ஒரு நல்ல மனிதராக மாற்றும். இந்த விஷயத்தில், நான் என்னை, செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட இதர வீராங்கனைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டேன்.
மகப்பேறுக்கு பிந்தைய காலக்கட்டத்தில், உங்களின் உடல் எப்படி மாறும் மற்றும் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை நீங்கள் கணிப்பது கடினம். எனவே, மீண்டும் களத்திற்கு திரும்ப முடியுமா? என்ற சந்கேதம் இருந்தது.
ஆனால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையைக் குறைத்து, மீண்டும் களம் கண்டு வெற்றிபெற்றேன். அதுவொரு சிறந்த அனுபவம்” என்றுள்ளார் சானியா மிர்ஸா.