ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.
மழை காரணமாக, இப்போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய விண்டீஸ் அணி சிறப்பாக ஆடியது.
துவக்க வீரர் பிளட்சர் 14 பந்துகளில் 34 ரன்களை அடிக்க, கிரன் பொல்லார்டு 37 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி 75 ரன்களைக் குவித்தார். பேபியன் ஆலன் 30 ரன்கள் அடிக்க, 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன் 4 ஓவர்கள் வீசி, 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதற்கு மாறாக, 2.3 ஓவர்கள் வீசிய பென்னட் விக்கெட் எடுக்காமல் 50 ரன்களையும், 1.3 ஓவர்கள் வீசிய ஜேம்ஸ் நீஷம் விக்கெட் எடுக்காமல் 32 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
பின்னர், சவாலான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, மனம் தளராமல் ஆடியது. அந்த அணிக்கு 16 ஓவர்களில் 176 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
டேவன் கான்வே 29 பந்துகளில் 41 ரன்களையும், பிலிப்ஸ் 7 பந்துகளில் 22 ரன்களையும், நீஷம் 24 பந்துகளில் 48 ரன்களையும், சான்ட்னர் 18 பந்துகளில் 31 ரன்களையும் அடிக்க, 15.2 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை அடித்து வென்றது நியுசிலாந்து அணி.