சென்னை:
இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் காரணமாக 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியது. இதனால் இன்று மதியம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட நீரானது திருநீர்மலை, அனகாபுத்தூர், திருமுடிவாக்கம், கவுல் பஜார் பகுதிகளில் உள்ள அடையாற்றில் கலந்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நள்ளிரவில் 7ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.